பிள்ளையான் மலேசியாவுக்கு தப்பி ஓட்டம்
த.ம.வி.புலிகள் என்ற ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையான் என்று அறியப்பட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகி, மகிந்த ஆதரவாளர்களுக்கு எதிராக பாரிய வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, ராஜபக்ச குடும்பத்தின் பல விசுவாசிகள், ராஜபக்சவுக்காக பல படுகொலைகளைப் புரிந்தவர்கள் நாட்டைவிட்டு தப்பியோடியிருந்தார்கள் அல்லது தப்பியோட வைக்கப்பட்டிருந்தார்கள்.
அந்த வகையில், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் உட்பட கிழக்கில் பல படுகொலைகளைச் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பிள்ளையானும், கடந்த 9ம் திகதி நாட்டைவிட்டு தப்பியோடி மலேசியாவில் மறைந்திருப்பதாகவும், பிரான்சுக்கு வருவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாகவும், ராஜபக்சக்களின் கட்டளைகளின் பெயரில் பிள்ளையான் செய்த பல சதிநடவடிக்கைகள் , படுகொலைகள் பற்றிய ஏராளமான தகவல்களை அவர் ஐ.நா.மனிதஉரிமைகள் அமைப்பிடம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிள்ளையான் தன்னை கொலைசெய்ய முயன்றதாலேயே அவரிடம் இருந்து தான் தப்பித்து வந்ததாகவும் அவர் அதிகாரிகளிடம் சாட்சியளித்துள்ளார்.