வன்முறையை தொடக்கிய காடையர் குழுவில் பலர் சிறைச்சாலை கைதிகள் – அம்பலமான உண்மை
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் திரட்டப்பட்ட காடையர் குழுவில் சிறைச்சாலை கைதிகளும் பயன்படுத்தப்பட்டமை அம்பலமாகியுள்ளது.
கொழும்பில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் மைதானத்திலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காடையர் கும்பல் மீது கோபமடைந்த பொதுமக்கள்
காடையர் குழுவை மடக்கி நையப்புடைத்தனர். இதன்போது பொதுமக்களால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டவேளை தாம் வடரேகா திறந்தவெளி சிறை முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகள் என ஒரு குழு தொிவித்துள்ளது.
மேலும் அலரிமாளிகையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் கலந்துகொள்வதற்காக சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் தாம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சத்குணநாதன்,
இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். நடைமுறைகளைப் பின்பற்றாமல் சிறையில் அடைக்கப்பட்டவர்களை சிறையிலிருந்து வெளியே எடுக்க முடியாது.
என சுட்டிக்காட்டிய அவர், வடரேக கண்காணிப்பாளருக்கு (SP) இது பற்றித் தெரியாது என்பது மிகவும் சாத்தியமற்றது என்றும் கூறினார். இந்தக் கைதிகளை அழைத்து வருமாறு கண்காணிப்பாளருக்கு யார் பணிப்புரை வழங்கியது என்றும்,
இதற்கு முன்னரும் கண்காணிப்பாளர் இதைச் செய்தாரா என்றும் சத்குணநாதன் மேலும் கேள்வி எழுப்பினார். “சிறைகளின் பொதுச்செயலாளர் என்ன நடவடிக்கை எடுப்பார்? சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் இப்போது எங்கே?
சிறையில் அடைக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது, என்று அவர் ட்விட்டரில் பதவிட்டுள்ளார்.