11 கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட புத்தர் சிலை – நாமலுக்கு என்ன தொடர்பு – அனுர
11 கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட ஒரு அடி உயரமான புத்தர் சிலைக்கு என்ன நடந்தது என்பது தொியாது என கூறியிருக்கும், ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸநாயக்க, தங்கத்தில் புத்தர் சிலை செய்வதற்கு பயன்படுத்திய அதே அச்சில் வெண்கல சிலையும் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
கொழும்பு மன்றக் கல்லுாரியில் நேற்று இடம்பெற்ற மோசடிகளை வெளிக்கொணரும் நிகழ்விலேயே அவர் இதனை வெளிப்படுத்தினார். அதேநேரம் நாமல் ராஜபக்ச தொடர்பான மோசடி ஆவணம் தம்மிடம் இருப்பதாக கூறிய அனுரகுமார,
“சந்தஹிரு செய” என்ற படையினரின் நினைவகம் ஒன்றை அமைப்பதற்காக சுங்கத்திணைக்களத்தில் இருந்து பெறப்பட்ட பெருந்தொகை தங்கத்தின் மூலம் செய்யப்பட்ட ஒரு அடி உயரமுள்ள புத்தபெருமானின் சிலைக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை கடற்படையினர் வடபகுதி கடலில் 45 கிலோ கிராம் தங்கத்தை கைப்பற்றினர். அதனை கைபற்றி 24 மணி நேரம் செல்லும் முன்னர் கடற்படை தளபதி, சந்தஹிரு சேயவை புதையலாக வைக்க கைப்பற்றிய தங்கத்தில் 8 கிலோ கிராம் தங்கத்தை தருமாறு சுங்க திணைக்களத்திடம் கோருகிறார்.
எனினும் கைப்பற்றிய தங்கத்தின் உரிமை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நாங்கள் ஒரு மாத கால அவகாசம் வழங்குவோம், இதனால் நேற்று கைப்பற்றிய தங்கத்தை இன்று வழங்க முடியாது என சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர், கடற்படை தளபதிக்கு பதில் அனுப்புகிறார். இந்த கோரிக்கை காரணமாக கைப்பற்றிய புதிய தங்கத்திற்கு பதிலாக ஏற்கனவே கைப்பற்றி அரசுடமையாக்கப்பட்ட தங்கத்தில் இருந்து
8 கிலோ கிராம் தங்கத்தை சுங்க திணைக்களம் வழங்கியுள்ளது. இதனை தவிர இலங்கை வங்கியிடம் இருந்து சுமார் மூன்று கிலோ கிராம் தங்கத்தை பெற்றுக்கொள்கின்றனர்.மொத்தமாக சுமார் 11 கிலோ கிராம் தங்கத்தை பெற்றுக்கொள்கின்றனர்.
இந்த தங்கத்தை வெலிசரயில் உள்ள கடற்படை முகாமுக்கு அனுப்பி வைத்து சந்தஹிரு சேயவில் புதையலாக புதைக்க ஒரு அடி உயரமான புத்தர் சிலையை ஒன்றை நிர்மாணிக்கின்றனர். அத்துடன் தங்க சிலையை செய்ய பயன்படுத்திய அச்சை பயன்படுத்தி
வெங்கலத்திலும் இரண்டு புத்தர் சிலைகளை செய்யப்படுகின்றன. கண்டி பிலிமத்தலாவை நாராம்பொத்த என்ற பிரதேசத்தில் ஒன்றரை அடி மற்றும் இரண்டரை அடி உயரமான இரண்டு புத்தர் சிலைகளை வெங்கலத்தில் செய்கின்றனர்.
அந்த சிலைகளுக்கு தங்கமூலம் பூசுகின்றனர்.இந்த புத்தர் சிலைகளை அனுராபுரத்தில் கண்காட்சியிலும் வைக்கின்றனர். இறுதியில் புதையலில் வைக்க செய்யப்பட்ட ஒன்றரை அடி உயர தங்க புத்தர் சிலை காணாமல் போய் விடுகிறது.
புதையலாக புகைப்பட்டது தங்க சிலையா அல்லது தங்கமூலாம் பூசப்பட்ட சிலையா என்பது இன்னும் கண்டறியப்பட முடியாமல் இருக்கின்றது. அதனை கண்டுபிடிக்க முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளன என்றும் அனுரகுமார குறிப்பிட்டார்.