பொதுவாக முயல்கள் இரவில் தான் குட்டி ஈணுகின்றன. அவை குட்டி போடும் போது எந்த ஒரு தொந்தரவையும் விரும்புவதில்லை. 7 – 30 நிமிடத்திற்குள் குட்டி ஈணுதல் நடைபெற்று முடிந்து விடும். சில சமயம் எல்லாக் குட்டிகளும் தொடர்ந்து வெளி வராமல், சில குட்டிகள் பல மணி நேரம் கழித்தும் வெளிவரலாம். குட்டி போட்டவுடன் தாய் முயல் குட்டிகளை நக்கி சினைக்கொடியை உண்டு விடும். பிறந்த குட்டிகள் தாயிடம் பாலூட்ட முயலும். அவ்வாறு பாலூட்ட இயலாத குட்டிகள் உடல் நலம் குன்றி குட்டியிலேயே இறந்து விடும். தாய் முயலானது வேண்டுமளவு அதன் விருப்பத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும். அப்போது தான் குட்டிகளுக்குத் தேவையான அளவு பால் கிடைக்கும். தாய் முயல் இரவில் தான் குட்டிகள் பால் குடிக்க அனுமதிக்கும். ஒரு ஈற்றில் 6-12 குட்டிகள் வரை போடும்
தாயிடமிருந்து பிரித்தல்
குட்டிகள் பிறந்த சில நாட்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே முக்கிய உணவு. 3வது வாரத்தில் சிறிதளவு உரோமம் வளர்ந்த குட்டிகள் கண் திறந்து, தீவனங்களைக் கொறிக்க ஆரம்பிக்கும். 4 – 6வது வாரத்தில் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரித்து விடலாம். முதல் 21 நாட்களுக்கு மட்டுமே தாய்ப்பால் அவசியம். அதன் பின் பாலைக் குறைத்து பிற தீவனங்களைக் கொறிக்கப் பழக்குதல் வேண்டும்.
இனம் பிரித்தல்
குட்டிகளைப் பிரிக்கும் போதே இனங்களைக் கண்டறிந்து ஆண், பெண் முயல்களைத் தனித்தனியாகப் பிரித்து விடவேண்டும். குட்டிகளின் இனப்பெருக்க உறுப்பை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் மூலம் அழுத்தும் போது ஆண்குறி காணப்பட்டால் ஆண் முயல் என்றும் அல்லது சற்று துவாரம் போல் காணப்பட்டால் அதைப் பெண் எனவும் கண்டறியலாம்.