பறக்கும் டெக்‌ஷி – சோதனையில் வெற்றி


அமீரகத்தில் போக்குவரத்து மேம்பாட்டுக்காகவும், மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு முயற்சிகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நாடு முழுவதும் வரும் காலக்கட்டங்களில் பறக்கும் டெக்சியை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எரிபொருளை சேமிக்கவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

இதில் தற்போது துபாயை தொடர்ந்து அபுதாபியில் அமெரிக்காவின் ஆர்ச்சர் நிறுவனத்தின் மிட் நைட் ஏர் கிராப்ட் என்ற விமானம் அபுதாபியில் பறக்கும் டாக்சியாக இயக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது முதற்கட்டமாக அபுதாபி மாநகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத்துறை ஒத்துழைப்பில் மிட் நைட் ஏர் கிராப்ட் விமானம் வெற்றிகரமாக வானில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இந்த விமானம் மேற்புறம் மற்றும் பக்கவாட்டில் சுழலும் இறக்கைகளை வைத்துள்ளதால் ஹெலிகொப்டர் போல செங்குத்தாக நின்ற இடத்தில் இருந்தே மேலெழும்பி பறக்க முடியும். அதேபோல் விமானம் போன்று நேராக செல்லக்கூடியது ஆகும். நேற்று நடந்த சோதனை ஓட்டத்தில் மிட் நைட் ரக விமானம் மணிக்கு 360 கி.மீ வேகத்தில் வானில் பறந்து சென்றது. இந்த விமானத்தை பயணிகள் மட்டுமல்லாமல் சரக்குகளை ஏற்றி செல்லவும் பயன்படுத்த முடியும். பறக்கும் டெக்சி போக்குவரத்துக்கான ஆதரவை அபுதாபி முதலீட்டு அலுவலகம் அளித்துள்ளது.

அடுத்த ஆண்டில் (2025) அறிமுகம் செய்யப்படும் பறக்கும் டெக்சி சேவையில் அபுதாபி-துபாய் இடையே பயண நேரம் 10 முதல் 20 நிமிடமாக குறையும். நகருக்குள் மட்டும் செல்ல 350 திர்ஹாமும், வெளியூர்களுக்கு செல்ல 800 முதல் 1,500 திர்ஹாம் வரையும் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என ஆர்ச்சர் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி நிகில் கோயல் தெரிவித்துள்ளார். 4 பேர் பயணம் செய்யும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் படிப்படியாக கட்டணங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என மேலும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *