வெடுக்குநாறிமலை விவகாரம் – ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்


வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆலய பூசகர் உட்பட எண்மரின் விடுதலை தொடர்பில் அவசரமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கூடித் தீர்மானித்துள்ளார்கள்.

எனினும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கூடிய இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லை.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த எட்டாம் திகதி சிவாராத்திரி வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்ட தருணத்தில் இரவு வேளைகளில் எவ்விதமான பூஜை, வழிபாடுகளையும் முன்னெடுக்க முடியாது என்று குறிப்பிட்டு பொலிஸார் அங்கிருந்து அவர்களை வெளியேற்றியதோடு அதில் முரண்டுபிடித்த எண்மரைக் கைது செய்தனர்.

அவர்கள் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கான பிணை அனுமதிக்கான கோரிக்கைகளும் நிரகாரிக்கப்பட்டுள்ளன.

மறுபக்கத்தில் சமயத்தலைவர்கள், வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தமது பாராளுமன்ற பதவி நிலைகளை துறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் இவ்விடயத்தில் கூடி முடிவுகளை எடுப்பதற்காக சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாக அழைப்பினை விடுத்திருந்தார்.

நேற்று முற்பகல் 11 மணிக்கு குறித்த கூட்டம் சி.வி.விக்னேஸ்வரனின் யாழ்ப்பாணத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகளின் சார்பில் வேந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இவர்களைத்தவிர, தொல்பொருளியல துறைசார் நிபுணத்துவம் மிக்க பேராசிரியர் புஷ்பரட்ணம் கலந்கொண்டதோடு, கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் நல்லூர் முதல் வவுனியா வரையிலான வாகனப் பேரணியில் பங்கேற்பதால் சமூமளிததிருக்கவில்லை.

அதேபான்று, தமிழரசுக்கட்சியின் சார்பில் சிவஞானம் சிறீதரன் வருகை தருவதாக கூறியபோதும் ஏகநேரத்தில் வவுனியாவில் பிறிதொரு நிகழ்வு இருந்தமையால் அவராலும் சமூகமளித்திருக்க முடியவில்லை.

சுமந்திரனும் தனிப்பட்ட காரணங்களால் கொழும்பில் தங்கியிருந்தமையால் அவரால் பிரசன்னமாகியிருக்க முடிந்திருக்கவில்லை இந்த நிலையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது,

பேராசிரியர் புஷ்பரட்ணம் ஆரம்பத்தில் தொல்பொருளியல் சட்டங்கள் சம்பந்தமாகவும், வெடுக்குநாறிமலையின் வரலாறு பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.ஆதன்பின்னர், பங்கேற்றிருந்த அரசியல் தரப்பினருக்கு இடையில் பேச்சுக்கள் நடைபெற்றன.

விசேடமாக பராளுமன்றத்தினை பகிஷ்கரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.பாராளுமன்றத்தினை பகிஷ்கரிப்பதால் ஏற்படுகின்ற சாதக, பாதகங்கள் பற்றி ஆராயப்பட்டதோடு அதனால் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட வேறுபல அடைவுகளை காணமுடியாது என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்துரூபவ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ள எண்மரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அணுகுமுறை தோல்வி அடையும் பட்சத்தில் அடுத்தகட்டமாக எவ்விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பது சம்பந்தமாக மீண்டும் ஆராய்வதெனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை கூட்டத்திற்கான அழைப்பு விடுத்திருந்த சி.வி.விக்னேஸ்வரன், உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *