இலங்கையில் நடந்த பயங்கரம் | இருவர் சுட்டுக் கொலை


பாதாள உலகக் குழு உறுப்பினர் தொன் ரொஷான் இந்திக்க எனப்படும் “மன்னா ரொஷான்” மற்றும் அவரது உதவியாளர் ஒருவரும் இன்று (25) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

பாதுக்க துந்தான, வெந்தேசிவத்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

“மன்னா ரோஷான்” மற்றும் அவரது உதவியாளரின் சடலங்கள் இன்று அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.

போதைப்பொருள் விற்பனைக்காக இவர்கள் இருவரும் பாதுக்க துந்தான வெந்தேசிவத்தைக்கு சென்றுள்ளதாகவும், அங்கு சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள லலித் கன்னங்கரவிடம் இருந்து போதைப்பொருள் பெறுவதற்காகவே இவர்கள் குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லலித் கன்னங்கரவின் வழிகாட்டுதலின் பேரில் இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட மன்னா ரொஷான், ஹங்வெல்ல நிரிபொல பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார், மேலும் இவர் 2019 ஆம் ஆண்டு வெடிகுண்டு ஒன்றை வைத்திருந்தமை மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் இருந்தவராவார்.

கொலை செய்யப்பட்ட அவரது உதவியாளர், களுஹக்கல சுதுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த சுபுன் நிமேஷ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

இவர் அப்பகுதியில் குரும்பை விற்பனை செய்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேல்மாகாண தென் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயந்த மாரப்பனவின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *