நாளை கொழும்பில் பாரிய போராட்டம் – மின்சார ஊழியர் சங்கம்
அனைத்து மின்சார ஊழியர்களையும் நாளை (01) கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார சபையை விற்பனை செய்ய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக மற்றும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
இதேவேளை, மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாளை நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (30) இரவும் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்திற்கு எதிராக மக்கள் தீப்பந்தங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக “அத தெரண” செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, உத்தேச மின்சாரத்துறை சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் அமைச்சரவையின் அவதானம் மற்றும் ஒப்புதலுக்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம், மின்சார சபையின் சேவைகள் திறக்கப்பட்டு, தனியாருக்கு மின்சார சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் போட்டித்தன்மை ஆகியவை மேம்படுத்தப்படும்.
முன்மொழியப்பட்ட மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்த பின்னர், அது வர்த்தமானியாக வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.
அபிவிருத்தி நிறுவனம் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களின் ஆற்றல் மற்றும் சட்ட நிபுணர்களின் உதவியுடன் கடந்த 10 மாதங்களாக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.