மனிதர்களை நடை பிணமாக்கும் Zombie Drugs – வெளியான முக்கிய எச்சரிக்கை
மனிதர்களை நடைப்பிணமாக மாற்றும் ‘Zombie Drugs’ எனும் போதைப்பொருள் இலங்கைக்கு ஊடுருவியுள்ளதாகவும் அவை ஹெரோயினை விட 50 மடங்கு ஆபத்தானவை எனவும் வைத்தியர் விராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
இணையவழி அலைவரிசையொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘Zombie Drugs’ என்பது விலங்குகளை அமைதிப்படுத்த, கட்டுப்படுத்த, மிருக வைத்தியர்களால் பாவிக்கப்படும் Tranqulizer எனும் அரியவகை மருந்துகளை அதிக செறிவில், ஏனைய போதைப் பொருட்களுடன் கலந்து சட்டவிரோதமாக தயாரிக்கப்படுகிறது.
இதேவேளை, சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் இவ்வகை போதைப்பொருளை பயன்படுத்திய ஒருவரே காட்டப்பட்டிருந்தாலும், அது சமூகத்தில் எவ்வளவு பரவலாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் வாழும் வாலிபர்கள், இளம் பெண்கள் இதற்கு அடிமையாவது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் முழு நகரமும், நாடும் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கும் பெரும் சவாலாகவே மாறியிருக்கிறது.
எனவே இதுபோன்ற ஒரு நிலை நமது நாட்டிற்கு வராமல் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர் விராஜ் பெரேரா மேலும் தெரிவித்தார்.