வடக்கில் நிரந்தர வீடுகள் இல்லாதவர்ளுக்கு நிரந்தர வீடுகள்


வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது அலுவலகத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பில் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.

இதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் குறைந்த வருமானம் கொண்ட நிரந்தர வீடற்ற குடும்பங்களை இனங்கண்டு வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

குறிப்பாக நிரந்தர வீடமைப்புத் திட்டத்தில் உட்கட்டமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும், மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களை உடனடியாகக் கண்டறிந்து அதற்கான திட்டங்களைத் தயாரித்து தம்மிடம் ஒப்படைக்குமாறும் ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டது.

நிரந்தர வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் 5 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது. வீடொன்றுக்கு தேவையான வசதிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என கூறப்படுகின்றது. இவ்வீடுகளின் கூரைகளைப் பயன்படுத்தி சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தைப் பெறுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் வடமாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் வடமாகாணத்தில் அமுல்படுத்தப்பட்ட சில வீட்டுத்திட்டங்கள் இறுதிக் கட்டம் வரை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களில் சுமார் 6000 நிரந்தர வீடுகள் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்க முடியாத நிலையில் காணப்படுகின்றது. இவ்வாறான தோல்வியடைந்த வீட்டுத்திட்டங்களைப் போலல்லாது இந்த 25,000 வீடமைப்புத் திட்டத்தை தயாரிப்பதில் பணிகள் முடியும் வரை அதிகாரிகள் மிகவும் திட்டமிட்டு சரியான முறையில் செயற்பட வேண்டுமென ஆளுநர் அறிவுறுத்தினார்.

மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் ஆகியோர் இத்திட்டத்திற்காக செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சில வீட்டுத்திட்டங்கள் தோல்வியடைந்தமைக்கான காரணங்களை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர்கள் கௌரவ ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். அவற்றைக் கேட்டறிந்த ஆளுநர் இவ்வீடமைப்புத்திட்டமானது ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்படும் என்று கூறினார்.

மேலும், கடந்த காலங்களில் பகுதியளவு கட்டப்பட்டு கைவிடப்பட்ட வீடுகள், இத்திட்டத்தின் கீழ் பணிகளை முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

வடமாகாணத்தில் நிரந்தர வீடொன்றின்றி சிரமத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் வாழ்வை வலுவாக முன்னோக்கி நகர்த்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதற்கு வடமாகணம் சார்பில் ஆளுநர் அவர்கள் ஜனாதிபதிக்கு நன்றியையும் இங்கு கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *