கஜேந்திரகுமார் வீட்டை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்திற்கு முன்பாக இன்று (26) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அவர் நாட்டில் இனவாதத்தை பரப்புவதாக குற்றம் சுமத்தி இந்த போரட்டம் இடம்பெற்றுள்ளது.
பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் எம்.பி உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் இன்று பிற்பகல் பம்பலப்பிட்டி ராணி மாவத்தையில் உள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பிரத்தியேக வீட்டிற்கு சென்றிருந்தனர்.
அங்கு போராட்டம் நடத்தக்கூடாது என நீதிமன்ற உத்தரவையும் பொலிஸார் பெற்றிருந்தனர்.
பொலிசார் தலையிட்டு எம்.பி.யின் வீட்டிற்கு சுமார் 20 மீற்றர் தூரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதுடன், அதன் பாதுகாப்பிற்காக பொலிஸார், கலகத் தடுப்புப் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இலங்கை விமானப்படையினரும் அழைக்கப்பட்டதைக் காணமுடிந்தது.
சுமார் ஒரு மணி நேரம் போராட்டம் இடம்பெற்றதுடன் பின்னர் போராட்டக் குழுவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேவேளை, தேர்தல் ஒன்று அருகில் வரும் போது தான் தமிழ், சிங்கள அரசியல்வாதிகளுக்கு நாடு, இனம், மதம் என்பவை நினைவுக்கு வருவதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார்.