சூனியம் நீக்குவதாக கூறி யாழ் யுவதி பாலியல் துஷ்பிரயோகம் – திருகோணமலை மந்திரவாதி கைது
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் யுவதி ஒருவரை சூனியம் நீக்குவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மந்திரவாதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (18.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய யுவதி ஒருவரே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த மந்திரவாதியால் பாதிக்கப்பட்ட யுவதி தனக்கு நடந்தவற்றை தனது தாயிடமும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் யுவதி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை பகுதியினை சேர்ந்த குறித்த மந்திரவாதி பில்லி சூனியம் நீக்குவதாக முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதிக்கு அடிக்கடி வந்து மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மந்திரவாதிக்கு உதவி புரிந்த மேலும் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது பாதிக்கப்பட்ட யுவதிக்கு மது அருந்த கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.