அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு உலகவங்கி உதவாது


“முந்தைய சமுர்த்தி திட்டத்தில் பெருந்தோட்ட மக்களை சேர்த்து கொள்வதில் குறைபாடு நிலவியதாக நாம் அறிந்துள்ளோம். இது சமுர்த்தி அல்ல. இந்த அஸ்வெசும திட்டம், உலக வங்கி உதவியுடனான நலிவுற்ற மக்களுக்கான மாதாந்த கொடுப்பனவு திட்டமாகும். பெருந்தோட்ட குடும்பங்களுக்கு நியாயமான வாய்ப்புகளை வழங்காமல், இத்திட்டதை நாம் முன்னெடுக்க மாட்டோம்” என்ற உறுதிமொழியை உலக வங்கியின் இலங்கைக்கான நாட்டு – பணிப்பாளர் பாரிஸ் ஹடாட் செர்வோஸ், தன்னை சந்தித்த மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவிடம் தெரிவித்தார்.

மனோ கணேசன் உடன், தமுகூ நுவரேலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர் கெளதம் பாலசந்திரன் ஆகியோரும் உலக வங்கி குழுவினரை நேற்று கொழும்பில் சந்தித்தனர்.

உலக வங்கியின் கொழும்பு அலுவலகத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பு உரையாடல் தொடர்பில் ஊடகங்களுடன் உரையாடிய மனோ கணேசன் கூறியதாவது,

அரசாங்கம் உலக வங்கியின் நிதி உதவியுடன் இலங்கையில் வாழும் வறிய நலிவுற்ற குடும்பங்களுக்கு மாதாந்தம் நிதி கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை முன்னெடுக்க உள்ளது. முந்தைய சமுர்த்தி திட்டத்தில் பெருந்தோட்ட மக்களை சேர்த்து கொள்வதில் குறைபாடு நிலவியதை போல் இந்த திட்டத்தில் பெருந்தோட்ட குடும்பங்களை புறந்தள்ள இடன் கொடுக்க மாட்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்றத்தில் தெளிவாக கூறி விட்டது. இந்த நிலைபாட்டை நான் நேரடியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கக்கும் கூறி விட்டேன்.

இது தொடர்பில் கொழும்பு உலக வங்கி அலுவலகத்தில், உலக வங்கியின் இலங்கைக்கான நாட்டு – பணிப்பாளர் பாரிஸ் ஹடாட் செர்வோஸ் குழுவினரை, தமுகூ சார்பாக நானும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான உதயகுமார், வேலுகுமார் மற்றும் மலையக சிவில் செயற்பாட்டாளர் கெளதம் பாலசந்திரன் ஆகியோரும் சந்தித்து தீர்க்கமாக கலந்துரையாடினோம்.

நுவரேலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகலை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வாழும் பெருந்தோட்ட குடும்பங்களுக்கு, இந்த மாதாந்த கொடுப்பனவு திட்டத்தில் இடம்பெற நியாயமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் என இதை குறுக்க கூடாது.

தோட்டங்களில் வேலை செய்தாலும், வெளியே வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும், பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் அனைத்து குடும்பங்களையும் இதில் சேர விண்ணப்பிக்க வாய்ப்பு வேண்டும். ஒரு வீட்டில் வசிக்கும், திருமணமான வெவ்வேறு குடும்பங்களையும் வெவ்வேறாக கணக்கெடுக்க வேண்டும் எனவும் நாம் கோரினோம். மேலும் பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கு இதில் தேவையின்றி தலையிட இடம் கொடுக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளோம்.

எமது அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு, “இது பழைய சமுர்தி திட்டம் அல்ல. இது நாம் நேரடியாக பங்கு கொள்ளும் திட்டம். பெருந்தோட்ட குடும்பங்களுக்கு நியாயமான வாய்ப்புகளை வழங்காமல், உலக வங்கி உதவியுடனான நலிவுற்ற மக்களுக்கான இந்த மாதாந்த கொடுப்பனவு இத்திட்டதை நாம் எக்காரணம் கொண்டும் முன்னெடுக்க மாட்டோம்” என்ற உறுதிமொழியை உலக வங்கியின் இலங்கைக்கான நாட்டு – பணிப்பாளர் செர்வோஸ், எமக்கு அளித்துள்ளார்.

அடுத்த சில தினங்களில், மேலும் சந்தித்து மேலதிக தகவல்களை பரிமாறிக்கொள்ள நாம் பரஸ்பரம் இணைங்கியுள்ளோம். இது நமது மக்கள் சார்பாக எமது முயற்சிகளுக்கு கிடைத்துள்ள சிறப்பான வெற்றியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *