கொலை செய்து புதைக்கப்பட்ட 22 வயது யுவதி
கொலை செய்யப்பட்டதாக கூறப்படும், கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 22 வயது யுவதியுடையது என சந்தேகிக்கப்படும் உடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கம்பளை நீதவான் முன்னிலையில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட கம்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியை கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த யுவதியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக அவர் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் சந்தேகத்துக்குரியவர் அந்த உடலத்தை அடக்கம் செய்த இடத்தை அடையாளம் காண்பிக்கவுள்ளார்.
இதேவேளை, வாரியபொல – மினுவன்கெடே – வல்பாலுவ பிரதேசத்திலுள்ள நீர் நிரம்பிய குழியில் இருந்து உடலங்களாக மீட்கப்பட்ட இருவரும். கொலை செய்யப்பட்டார்களா? இல்லையா? என்பது தொடர்பில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, களுத்துறையில் உள்ள ஐந்து மாடி விடுதி ஒன்றில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த 16 வயது மாணவியின் மரணம் தொடர்பிலான அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கப்பெறவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த மாணவி மது அருந்தியிருந்தாரா? இல்லையா? என்பது தொடர்பில் அந்த அறிக்கை ஊடாக அறிந்துக் கொள்ள முடியும் என களுத்துறைக்கு பொறுப்பான காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்த மாணவியின் கையடக்க தொலைபேசியை கண்டுபிடிப்பதற்காக, கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடுதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், இதுவரை அந்த கையடக்க தொலைபேசி கிடைக்கப்பெறவில்லை.
அவரது கையடக்க தொலைபேசியை களுகங்கையில் எறிந்ததாக, கைது செய்யப்பட்டுள்ளவர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த பகுதியில் தேடுதல்கள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேநேரம், குறித்த 16 வயதுடைய பாடசாலை மாணவி, பிரதான சந்தேகநபருக்கு விற்பனை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமது நண்பியுடன் விருந்தகத்துக்கு சென்றிருந்த 22 வயதான இளைஞர், குறித்த 16 வயது, மாணவியை 20 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய ஆலோசனை கூறியதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன் குறித்த 22 வயதுடைய இளைஞன், பிரதான சந்தேக நபருடன், 16 வயது மாணவியை தொடர்புபடுத்தியமைக்காக, 20ஆயிரம் ரூபா தொகையில் ஒரு பகுதியை பெற்றுள்ளார் என்றும் காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.