கூடாரம் அமைத்து தங்கிய ஜோடி – யானை தாக்கி யுவதி உயிரிழப்பு
பதுளை – கொஸ்லந்தை பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான இளம் ஜோடி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து இளம் ஜோடி தங்கியிருந்த நிலையில் காட்டு யானை தாக்கி 23 வயதான தருஷி கவீஷா என்ற யுவதி உயிரிழந்திருந்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 23 வயதான தனுஷ்க என்ற இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், யுவதியின் மரணம் தொடர்பில் சாட்சியமளித்துள்ளார்.
இளைஞன் வழங்கிய சாட்சியம்
இது தொடர்பில் சாட்சியமளித்த தனுஷ்க மதுஷன் கூறியதாவது,
நாங்கள் திருமணம் முடிக்கவில்லை. எனது காதலி மாத்தறை, குருநாகல் தாதியர் இல்லத்தில் கல்வி கற்று வருகின்றார்.நேற்று காலை குருநாகலிலிருந்து வந்து அப்புத்தளையில் உள்ள எனது நண்பரின் வீட்டிற்கு சென்று மதியம் மூன்று மணியளவில் மலைப்பகுதிக்கு சென்றோம். பிரதான வீதியில் இருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் சுத்தப்படுத்தப்பட்ட இடத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தோம்.
இரவு 10.30 மணியளவில் யானை வந்தது. சத்தம் இல்லாமல் கூடாரத்திற்குள் பதுங்கியிருந்தோம். யானை வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை. உடனே வந்து கூடாரத்தை யானை மிதித்து விட்டு சென்றது. நாங்கள் இருந்த பகுதியில் தொலைபேசிக்கு சிக்னல் இல்லை. நண்பருக்கு அழைப்பினை மேற்கொள்ள பலமுறை முயற்சித்தேன். அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
கவீஷாவின் வயிற்றையும் நெஞ்சையும் பலமாக யானை மிதித்துவிட்டது. அவள் தண்ணீர் கேட்டு கஷ்டப்பட்டு பேசிக்கொண்டிருந்தாள்.எனது இடது கை உடைந்துவிட்டது. கையை குணப்படுத்த முடியுமா என்றும் கேட்டாள்.
இதன்பின்னர் மெதுவாக நகர்ந்து சென்று நண்பர்களுக்கு அழைப்பினை எடுத்தேன். சுமார் 11.59 மணியளவில், சிக்னல் கிடைத்ததும் யானை வருவதாக தெரிவித்தவுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் வந்து பார்த்த போது அவள் உயிரிழந்துவிட்டாள். யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
அடுத்த நாள் ( 12.05.2023) காலை 6:30 மணியளவில், கிராம மக்களும் 1990 களில் வந்தவர்களும் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவள் என்னை விட்டுச்சென்றுவிட்டாள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் யுவதியை காட்டு யானை தாக்கியதில் நெஞ்சு மற்றும் வயிற்றில் பல இடங்களில் காயம் ஏற்பட்டமையினால் திடீர் மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்தியர் சானக ரொஷான் பத்திரன தெரிவித்துள்ளார்.
குறித்த ஜோடி நாட்டின் பல இடங்களுக்கு சென்று அந்தக் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதனால் பிரபல்யம் அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.