வெடுக்குநாறி எங்கள் சொத்து – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் கைதை கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (11.05) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘தமிழர்களின் தொன்மையை அழிக்காதே, வெடுக்குநாறி எங்கள் சொத்து, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலி, நீதியில்லா நாட்டில் நீதிமன்றம் எதற்கு, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்’ போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
சுமார் 30 நிமிடம் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சிலரும் கலந்து கொண்டனர்.