பாடசாலை மாணவி மரணம் – பெண் ஒருவர் உட்பட இருவர் கைது
களுத்துறை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் உள்ள ரயில் பாதைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்றுமொருவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
களுத்துறை ரயில் பாதையை அண்டிய ஐந்து மாடிகளைக் கொண்ட தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி மற்றுமொரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடன் களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்து இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறிது நேரம் கழித்து பெண் ஒருவரும் ஆணும் ஹோட்டலை விட்டு வெளியேறியதாகவும், உயிரிழந்த சிறுமியுடன் இருந்த நபரும் ஹோட்டலை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், விடுதிக்கு பின்புறம் உள்ள ரயில் பாதை அருகே சிறுமியின் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமியுடன் இருந்த இளைஞனைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சிறுமி உயிரிழந்த விதம் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், இது கொலையா என்பது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.