ஜனாதிபதியின் சந்திப்பை புறக்கணிப்போம் – கூட்டமைப்பு முடிவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று பிற்பகலில் யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,
எதிர்வரும் 11, 12 ,13 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடுவதாக அறிவித்துள்ளார்.
அவரது சந்திப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் மற்றும் பொருளாதார விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை.
தமிழ் மக்களின் அதிகார பரவலாக்கம் என்பது வடக்கு கிழக்கு சார்ந்ததாக காணப்படுகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும்- என்றார்.
குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், என்.ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான இரா துரைரட்ணம், பா.கஜதீபன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் செயலாளர் துளசி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஆர்.இராகவன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் கு.சுநே்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.