பூநகரியில் ஒரு கிராமத்தை இல்லாது செய்யப்போகின்றார்கள் – சிறிதரன் குற்றச்சாட்டு
காலிமுகத்திடலில் கடலை தரையாக்கியும், பூநகரியில் தரையை கடலாக்கியும் ஒரு கிராமத்தை இல்லாது செய்யப்போகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம் சாட்டுகின்றார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொன்னாவெளி என்ற கிராமத்தில் இருக்கின்ற மிகப்பெரிய வளமான முருகைக்கற்களை அகழ்ந்தெடுத்து அந்த இடத்திலே ஒரு பாரிய சீமெந்து தொழிற்சாலையை அமைப்பதற்காக டோக்கியோ சீமெந்து நிறுவனம் முயற்சி எடுப்பதாக அண்மையில் செய்திகள் கிடைத்துள்ளன.
குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளிற்கு மேலாக அந்த இடத்திலே ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். அப்பொழுது நாங்கள் பல தடவை சென்று அதுபற்றி ஆராய்ந்தபொழுது சரியான விடைகளை சொல்லுவதில்லை.
பெருமளவில் சிங்கள மொழி பேசுபவர்களே குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். நடைபெறுவது ஆய்வு மட்டும்தான் என்று அவர்கள் சொல்லியிருந்தார்கள். இது தொடர்பாக அப்போது இருந்த பிரதேச செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவுடனும் பேசும்பொழுதும், அங்கு ஆய்வு மாத்திரமே இடம்பெறுவதாகவு்ம, அங்கு எந்த பணிகளும் தொடங்கப்படமாட்டாது எனவும், அங்கு அப்படி ஒரு கல்லு இல்லை என்ற செய்திதான் எமக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அண்மை நாட்களிலே அங்கு பெரிய சீமெந்து தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வீடு கட்டி தருகின்றோம், வீதி போட்டு தருகின்றோம், பல்வேறு உதவிகளை செய்கின்றோம் எனக்கூறி ஒரு கும்பல் மக்களிடமிருந்து வெற்றுப்பேப்பர்களில் கடிதங்களை வாங்குகின்றார்கள்.
அவற்றை பயன்படுத்தி, இங்கு தொழிற்சாலையைதான் மக்கள் கேட்கின்றார்கள் என்ற அடிப்படையில் அவர்கள் அக்கடிதங்களை மற்றவர்களிற்கு விநியோகம் செய்கின்றார்கள். அப்பாவிகளாக வறுமையின் விளிம்பிலும், வறுமைக்கோட்டிலும் வாழுகின்ற மக்கள் இவ்வாறான விடயங்களிற்கு ஆதரவளிப்பது சாதாரணமானது. அதை நாங்கள் யாரும் நிராகரிக்க முடியாது.
அந்த வறுமையையும், ஏழ்மையையும் பயன்படுத்தி, பணத்தின் ஊடாக அப்பகுதி மக்களை குடிபெயர்த்தும் பாரிய முயற்சியை இவர்கள் செய்வதானது மிகப்பெரிய ஆபத்து கிளிநொச்சி மண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பொன்னாவெளி என்ற பெயரை பொன் என்ற அடிப்படையில், எத்தனையோ நூறு ஆண்டுகளிற்கு முன் வைக்கப்பட்ட ஒரு இடம். இலங்கையின் வரலாற்றில் அந்த இடம் மிக தொண்மம் வாய்ந்தது.
ஈழவூர், புளியந்தரை வாழ்ந்த பூர்வீர்க அடிப்படையிலான பல்வேறுபட்ட ஏடுகள் அந்த ஊர் தொடர்பாக காணப்படுகின்றது.அது தவிர, இலங்கையின் தரலாற்றில் 3500 ஆண்டுகளிற்கு மேலாக தொடர்ந்தும் வாழுகின்ற ஓர் இனக்குடும்பம் கௌதாரி முனை, பொன்னாவெளி, வேரவில், வலைப்பாடு, கிராஞ்சி, பாலாவி போன்ற இடங்களில் காணப்படுகின்றது.
இந்த மக்களினுடைய வாழ்க்கை முறையை சிதைத்து, இன்னும் 100 ஆண்டுகளிற்கு பிறகு எமது மக்கள் பயன்படுத்தக்கூடிய இயற்கை வளத்தை கொள்ளையடிப்பதற்கான பாரிய திட்டத்தை இலங்கை அரசு முன்னெடுத்திருக்கின்றது.
ஓர் அரசியல் தீர்வு இல்லை. மக்களிற்கான நியாயமான அபிவிருத்தி இல்லை. அவர்கள் வாழும் பகுதிகளில் நிலத்தை ஆக்கிரமித்தும், விகாரைகளை அமைத்துக்கொண்டும் அதேநேரம் தொழிற்சாலை அமைத்தல் என்ற மாஜையை தோற்றுவித்து அந்த பகுதியில் மக்கள வாழ முடியாதவாறு இடம்பெயர்கின்ற மிகப்பெரிய காரியத்தை இலங்கை அரசு துள்ளியமாக கையாள்கின்றது.
அந்த நுண்ணிய முறை என்பது எமக்கு மிகப்பெரிய ஆபத்தானது. இது தொடர்பாக பொறுப்பு வாய்ந்த கல்வி நிறுவனம் என்ற வகையில் யாழ்பபாண பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எழுத்து மூலமாக கடிதம் ஒன்றை நான் வழங்கியிருக்கின்றேன்.
அவருடைய விஞ்ஞானத்துறை, தொல்பியல்த்துறை சார்ந்தவர்கள் அந்த இடத்தில் மாணவர்களைக்கொண்டு அவர்களின் கற்றலோடு சேர்த்து, அங்கு அமைக்கப்படவுள்ள சீமெந்து தொழிற்சாலை சூழலுக்கு பாதிப்பில்லாத அல்லது மக்களிற்கு பாதிப்பில்லாத நன்மை தீமைகளை சொல்லுகின்ற ஆதாரபூர்வமான உண்மைகளை கற்றலுக்கு ஊடாக வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற பொறுப்பு வாய்ந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்களை கேட்டிருக்கின்றேன்.
இதேவேளை, இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கும் ஓர் கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றேன். இதுவரை காலமும் இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசப்படவில்லை. பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படவில்லை.
மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் இது தொடர்பில் எமது கருத்துக்களை பிரஸ்தாபித்திருக்கின்றோம், ஆனால் எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. ஆகையால், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவை கூடி, இவ்விடயம் தொடர்பில் அவர்களது நேர்முகத்தை செய்து அதன் பின்னர் அதனை செய்யலாமா இல்லையா என்ற கருத்துக்களின் அடிப்படையில் முடிவுக்கு வரலாம்.
எனவே, இவ்விடயத்தில் விரைந்து செயற்படுமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கின்றேன். கடிதங்களுடன் மட்டுமல்லாது, அங்கு சென்று பொள்ளாவெளி மற்றும் அதனை அண்மித்துள்ள கிராமங்களில் உள்ள அமைப்புக்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை ஆலோசனைக்கூட்டத்தை நடாத்தியிருக்கின்றோம்.
மக்களுக்கு பாதகமான, மக்கள் வாழ முடியாத விடயங்கள் கையாளப்பட்டால், அதனை முழுமையாக எரிக்கும் வகையில், ஆய்வுக்கட்படுத்தி செயற்படுவோம்.
குறிப்பாக, அங்கு 300 அடிக்கு மேலாக உள்ள முருகக்கற்களை எடுக்க முற்பட்டால், ஒரு மிகப்பெரிய நிலப்பிரதேசம் அங்கு இல்லாமல் போகும். வடக்கு மகாணத்தில் பூநகரி பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு துண்டு நிலம் இலங்கையின் வரைபடத்திலிருந்து காணாமல் போகலாம்.
அது கடலாக மாறக்கூடும். இலங்கை வரைபடத்தில் காலிமுகத்திடலில் கடலாக இருந்த இடத்தை தரையாக மாற்றியிருக்கின்றது இலங்கை அரசு. ஆனால் இங்கு கரையை கடலாக மாற்றுகின்றார்கள்.
இங்குள்ள மக்களையும் இடம்பெயரச்செய்து, அந்த இடத்தையும் இல்லாமல் செய்கின்ற மிகப்பாரிய அபாயகரமான செயற்திட்டம் இங்கு ஆரம்பிக்கப்படுகின்றது. குறிப்பாக 300 அடி ஆழத்திற்கு கல்லு தோண்டப்பட்டால், மிக அருகிலி இருக்கின்ற கடல்நீர் உட்புகுந்து அந்த கிராமமே இல்லாது போகக்கூடிய சூழல் ஏற்பட இருக்கின்றது.
அந்த ஆபத்திலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால், இதுபற்றிய சூழல் தொடர்பில் தேடல் உள்ளவர்கள் மிகத் தெளிவாக மக்களிடத்தில் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.