யாழில் நீதிபதி முன் காதலியின் கன்னத்தில் அறைந்த இளைஞன்
யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, நீதிபதியின் முன்பாக, முன்னாள் காதலியின் கன்னத்தில் அறைந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மல்லாகம் நீதிமன்றத்தில் நடந்துள்ளது. சம்பவத்தில் ஆவரங்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் பக்கத்து வீட்டு யுவதியுடன் காதல் வசப்பட்டுள்ளார். எனினும், பின்னர் அவரது நடத்தையால் அதிருப்தியடைந்த யுவதி, காதல் உறவை நிறுத்தி விட்டார்.
எனினும், இளைஞன் விடாக்கண்டனாக யுவதிக்கு தொல்லை கொடுத்ததுடன், துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசாரிடம் முறையிடப்பட்டதை தொடர்ந்து, இளைஞன் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, எதிராளி சாட்சியம் அளித்து விட்டு வரும்போது, சந்தேகநபர் நீதவானின் முன்பாக யுவதியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.
இதனையடுத்து இளைஞன் மீது பாலியல் துன்புறுத்தல், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு நீதவான் கட்டளை இட்டதுடன், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அதேவேளை சந்தேகநபரான இளைஞருக்கு எதிராக ஏற்கெனவே பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.