இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு – வெளியான எச்சரிக்கை
நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விநியோகஸ்தர்களினால் மக்கள் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தின் கணக்குப் பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த இடைநிறுத்தல் செயற்பாடானது நேற்று முன்தினம்(14) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமையவே நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் செலுத்தப்பட்ட போதிலும் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியின் கணக்கில் பணத்தை வைப்பிலிடும் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்படமாட்டாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சப்ரகமுவ பிராந்திய முகாமையாளர் விநியோகஸ்தர்களுக்கு அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் மக்கள் வங்கியின் தலைவருக்கும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் மட்டத்திற்கும் தெரியப்படுத்தி தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.