குற்றவாளியை கைது செய்ய தயங்கும் யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸார்
தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸார் தயங்குவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரும் அவரது மகனின் மனைவியும் கடந்த 2022.06.10 அன்று அராலி மத்தி பகுதியைச் சேர்ந்த ஆணொருவரின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.
இந்த தாக்குதலில் குறித்த குடும்பப் பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். தாக்குதலில் அவரது கையில் சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் வட்டுக்கோட்டை பொலிஸார், தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று முறைப்பாட்டினை வாபஸ் வாங்குமாறும், இனிமேல் இவ்வாறு நடைபெறாது என்றும் குடைச்சல் கொடுத்து வந்துள்ளனர்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டை வாபஸ் வாங்கவில்லை. தாக்குதலை மேற்கொண்ட நபர் வவுனியாவில் தலைமறைவாகி இருந்த நிலையில் சில நேரம் அராலி மத்தி பகுதிக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அவர் வரும் வேளைகளில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு பாதிக்கப்பட்ட தரப்பினர் இரகசிய தகவல்களை பலமுறை வழங்கினர். ஆனால் பொலிஸார் சூத்திரதாரியை கைது செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கையில்,
என் மீது தாக்குதலை நடாத்தியவரை கைது செய்துள்ளதாகவும், என்னை விசாரணைக்கு வருமாறும் வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்தனர். அதனடிப்படையில் நான் காலை 10 மணிக்கு பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தேன்.
அங்கு என்னை தாக்கியவர் நின்றிருந்தார். அங்கே அவருக்கு உயர்ந்தபட்ச மரியாதை வழங்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. விசாரணையின்போது பொலிஸார் “இந்த பெண்ணை தாக்கி அவரை படுகாயமடைய செய்தீர்களா நீங்கள்” என அவரிடம் வினவினர்.
அவர் அதற்கு “இவரை எனக்கு தெரியாது, இதற்கு முன்னர் நான் பார்த்திருக்கவில்லை, இவ்வாறு இருக்கையில் நான் எப்படி தாக்குதல் நடாத்துவது?” என கூறினார். அதற்கு பொலிஸார் எதுவும் கூறவில்லை.
இறுதியில், இந்த பிரச்சினையை நீதிமன்றத்திற்கு விடுமாறு நான் கூறினேன். அதற்கு பொலிஸார் “எங்களது வேலை எங்களுக்கு தெரியும், இந்த பிரச்சினையை எங்கே விட வேண்டும் என நீங்கள் எங்களுக்கு கூற தேவையில்லை” என கூறினர்.
பின்னர் இந்த பிரச்சினையை இணக்க சபைக்கு விடுவதாக பொலிஸார் கூறினர். அதற்கு நான் எனது எதிர்ப்பை காட்டி ” இந்த பிரச்சினை இணக்க சபைக்குரிய பிரச்சினை இல்லை எனவே நீதிமன்றத்திற்கு விடுங்கள்” என கூறினேன்.
அதற்கு அவர்கள் “நீதிமன்றத்திற்கு விட்டாலும் அங்கு குற்றப்பணம்தான் தீர்ப்பார்கள், நாங்கள் அந்த குற்றப்பணத்தை இங்கேயே வாங்கி தருகின்றோம்” என கூறினர். அதற்கு நான் “பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நான் சந்திக்க வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை அவர் விசாரணை செய்ய வேண்டும்” என்று கூறினேன்.
அதற்கு அவர்கள் “அவருடன் கதைப்பதற்கு உங்களுக்கு அனுமதி வழங்க முடியாது” எனக்கூறி இணக்க சபைக்கு இந்த பிரச்சினையை விடுவதாக கூறி மிரட்டி என்னிடம் கையொப்பம் வாங்கினர்.
பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகள், அவர்கள் இலஞ்சம் பெறுகின்றனரா? என்ற ஐயத்தை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பொலிஸாரிடம் நீதி கிடைக்கு என்று எதிர்பார்த்திருந்த எனக்கு அங்கு பயமுறுத்தலும் அவமானமுமே கிடைத்தது.
ஆகையால் இந்த பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நானும் எனது மகனும் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம் என்றார்.
அண்மைக் காலமாக வட்டுக்கோட்டை பொலிஸாரின் நீதித்தன்மை இல்லாத அடாவடியான செயற்பாடுகள் குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த வாரமும் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு ஒன்று
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.