மன்னார் இந்து மத பீடத்தின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” திருவள்ளுவர்

தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரிய பகவான் மகர ராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று உலகமெலாம் பரந்து வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது.

இத்திருநாளில் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மன்னார் இந்து மத பீடத்தின் தலைவர் செந்தமிழருவி கலாநிதி சிவஸ்ரீ மஹா.தர்மகுமார குருக்கள் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இவ் விழா சங்க காலத்தில்; வேளாண்மைக்கு வேண்டிய மழை நீரையும், சூரிய ஒளியையும் காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்கைக்கும் தம்மோடு சேர்ந்து கஷ்டப்பட்டு உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக உழவர்களால் கொண்டாடப்பட்டு வந்ததுள்ளது.

உழவர்கள் இயற்கையின் உதவியால் ஆடி ஆவணி மாதங்களில் விதைத்து, பயிராக்கி அறுவடை செய்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் விழா

தற்போது உழவர்கள் மட்டுமன்றி வேறு பல தொழில் புரியும் எல்லா தமிழ் மக்களும் (தம் மூதாதையினரான உழவர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த) பண்டிகையாக கொண்டாடுகின்றார்கள். அதன் காரணமாக இப்பண்டிகை “உழவர் பண்டிகை” என்னும் பெயர் மழுங்கி ”தமிழர் பண்டிகையாக”பொங்கியெழுந்துள்ளது.

பொங்கல் விழாவானது முன்போல் வீடுகளில் மட்டுமன்றி; ஆலயங்கள், கல்விக் கூடங்கள், தொழில் நிலையங்களிலும், இந்துக்கள் அல்லாத தமிழ் மக்களாலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதால் தமிழர் பண்டிகையாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பெற்று சிறப்புப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொங்கல் என்பதற்கு ”பொங்கி வழிதல்”, ”பொங்குதல்” என்பது பொருள். அதாவது புதிய பானையில் பால் பொங்கி எழுந்து பொங்கி வழிந்து வருவதால், எதிர்காலம் முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கிச் சிறக்கும் என்பதும், களனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதும் இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

“உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் ஏனையோர் சோற்றில் கை வைக்க முடியும்” என்பது பலரும் அறிந்த பழமொழி. அதனால் போலும் உழவுத் தொழிலின் சிறப்பை கூற வந்த திருவள்ளுவர் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” எனவும், “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”என பாரதியாரும் கூறியுள்ளனர்.

மழை பொய்த்து விட்டால் வேளாண்மையும் பொய்த்து விடும் என்பதை கூற வந்த “திரைக்கவித் திலகம் மருதகாசி “ பூமியிலே மாரி (மழை) எல்லாம் சூரியனாலே, பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே” என்று கூறினார்.

சூரியனால் மழையும், பயிர் வளர்ச்சியும்; மழையினால் பயிர் வளர்ச்சியும், விளைச்சலும் உண்டாகின்றன என்பதனை உணர்ந்த எம் மூதாதையினர் மழைக்கு மூல காரணியாக விளங்கும் சூரியனை அறுவடைக் காலத்தில் வணங்கி தாம் பெற்ற நெல் மணியில் பொங்கி விருந்து படைத்து நன்றிக்கடன் செலுத்துவது மரபாகி வந்துள்ளது.

இலங்கையில் ஒரு வருடத்தில் மூன்று போகம் நெல் சாகுபடி செய்யும் வளம் சில பகுதிகளில் காணப்படுகின்றன.

“பொங்கும் மங்களம் எங்கும் தங்குக”

அனைவருக்கும் தித்திக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *