உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் வழக்கு
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் அலட்சியத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் வழக்குத் தொடருமாறு இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளது.
சுமார் 270 பேரைக் கொன்ற 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில் இன்று இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அரசு குழுவிற்கு விசுவாசமாக இருந்ததாக கூறப்படும் இரண்டு உள்ளூர் குழுக்கள், மூன்று தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளில் ஈடுபட்டிருந்த வழிபாட்டாளர்களையும், மூன்று பிரபலமான விருந்தகங்களில் காலை உணவை உண்கொண்ட சுற்றுலாப் பயணிகளையும் குறிவைத்து, ஒரே நேரத்தில் ஆறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மக்களைப் பாதுகாக்கும் கடமைகளை புறக்கணித்த நான்கு பேருக்கு எதிராக சட்டமா அதிபர், நீதிமன்றில், குற்றச்சாட்டை முன்வைப்பார் எனத் திருச்சபை எதிர்பார்ப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி துத்திகா பெரேரா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், மதத் தலைவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பில், இரண்டு உயர் புலனாய்வு அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரும் தளபதியுமான முன்னாள் ஜனாதிபதி சிறிசேன ஆகியோர் நட்டஈட்டை செலுத்தவேண்டும் என்று நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆயுதப்படைகளின் தலைவராக இருந்த மைத்ரிபால சிறிசேன, தாக்குதல்களுக்கு முன்னர் பெறப்பட்ட குறிப்பிட்ட வெளிநாட்டு உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் செயற்பட தவறிவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல்களில் 269 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 பேர் காயமடைந்தனர்.