பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய வர்கள் கைது
பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (25) இரவு, வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெந்தல சந்தி பகுதியில் எலகந்த வீதியிலிருந்து கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் நுழைவாயிற்கு கூச்சலிட்ட வண்ணம் முச்சக்கர வண்டியில் பயணித்த சிலர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்னர், கடமையில் இருந்த இரு அதிகாரிகள் குறித்த முச்சக்கர வண்டியை சோதனையிட முற்பட்டுள்ளனர்.
அப்போது முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் மதுபோதையில் இருந்ததை அவதானித்த பொலிஸார், முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்ய முற்பட்ட போது குறித்த குழுவினர் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். .
சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, வத்தளை பகுதியில் வைத்து மற்றுமொரு அதிகாரிகள் குழு சந்தேகநபர்கள் மூவரையும் முச்சக்கர வண்டியுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 29 மற்றும் 30 வயதுடைய வத்தளை, மாபோல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களின் தாக்குதலில் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சந்தேகநபர்கள் இன்று (26) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.