மின் அழுத்தியால் மனைவியின் முகம் மற்றும் முதுகில் சூடுவைத்த கணவன்
கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து மின் அழுத்தியைப் பயன்படுத்தி மனைவியின் முகம் மற்றும் முதுகு பகுதிகளில் சூடு வைத்த கணவன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் ஹாலி -எல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹாலி -எல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் மனைவியான 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.பாதிக்கப்பட்ட பெண் துணிகளை மின் அழுத்தியால் அழுத்திக் கொண்டிருந்தபோது
கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது கையிலிருந்த மின் அழுத்தியை பறித்து மனைவியின் முகம், கழுத்து மற்றும் முதுகில் அழுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்பதியினருக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு பின்னர் பெண் அடிக்கடி தாக்கப்படுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவரது உடலில் ஏற்கனவே பல தீக்காயங்கள் ஏற்பட்ட தழும்புகள் இருந்தமையும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.