ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதும் ஆபத்துதான்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது பலருக்கும் தெரிந்த விடயமாக உள்ளது. ஆனால் சர்க்கரை அளவு குறைவது என்பது கூட ஆபத்தான ஒரு நிலைதான் என்பதை பற்றி பலரும் மறந்துவிடுகிறோம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு குறையும் என்பது பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் என்னவென்பது பற்றி பலரும் சிந்தித்து பார்ப்பதில்லை.

ரத்தத்தில் சர்க்கரை அளவு

“ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது இதய நோய்கள், பக்க வாதம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கண்கள் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்பதால் அதைப் பற்றி அதிகமாக பேசப்படுகிறது.

எனினும் சர்க்கரை நோய் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுத்தும் அபாயம் இருந்தாலும் மக்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை. இது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளவில்லை.

அதேபோல, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதும் மிகமிக ஆபத்தானது. சர்க்கரை குறைவாக இருப்பது சிறந்தது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இரண்டுமே ஆபத்தானது தான் என்கின்றனர் மருத்துவர்கள்

டைப் 2 நீரிழிவு நோயாளிகள்

டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலுமே, அது உடல்நலத்திற்கு பெரிய ஆபத்தை உடனடியாக ஏற்படுத்தாது.

ஆனால் ஹைப்போகிளைகேமியா என்று கூறப்படும் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் பொழுது அவர்கள் உடனடியாக மயங்குவதற்கும், நினைவு தப்புவதற்கும், அதனால் ஏற்படக்கூடிய தீவிரமான பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள் என கூறப்படுகின்றது.

எனவே சர்க்கரை அளவு குறைவதால் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பற்றியும் அனைவரும் புரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

சர்க்கரையின் அளவு குறைந்தால் ஏற்படும் அறிகுறிகள்

வெளிறி போன தோற்றம்

கை, கால், உடல் நடுக்கம்

தலை சுற்றல், மயக்கம்

வியர்வை

சீரற்ற இதயத்துடிப்பு

பசி

கவனம் செலுத்த முடியாமை

தீவிரமான சோர்வு

எரிச்சலான உணர்வு

படபடப்பு, பதற்றம்

குழப்பமான மனநிலை,

கோ-ஆர்டினேஷன் இல்லாமை

பேச முடியாமல் தடுமாற்றம் என்பன ஏற்படுமாம்.

உணவு குறித்த அவதானம்

எனவே நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்ளும் பொழுது சர்க்கரை அளவு குறைந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் சர்க்கரை அளவு குறையாமல் பார்த்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஏதேனும் ஒருவேளை அவர்கள் உணவு சாப்பிடாமல் விட்டால் அல்லது தாமதமாக சாப்பிட்டால் உடனடியாக அவர்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.

எனவே சர்க்கரை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு ஹைபோகிளைகீமியா ஏற்படக்கூடிய சாத்தியமும் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.