கால்பந்து வீரருக்கு மரண தண்டனை

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அமீர் நசீருக்கு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது, கால்பந்தாட்ட ரசிகர்களையும், கால்பந்தாட்ட வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து கால்பந்து வீரர்களின் சர்வதேச கூட்டமைப்பு ட்விட்டர் பக்கத்தில், “தனது நாட்டின் பெண்களின் உரிமைகளுக்காகவும் அடிப்படை சுதந்திரத்திற்காக பிரசாரம் செய்த கால்பந்து வீரர் அமீர் நசீர், ஈரானில் மரண தண்டனையை எதிர்கொள்கிறார் என்ற அறிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ளோம். அமீருக்கு நாங்கள் துணை நிற்கிறோம். அவரது தண்டனையை உடனடியாக நீக்க வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த அமீர் நசீர்? – ஈரான் தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ள அமீர் நசீர் அந்நாட்டின் பீரிமியர் லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஈரானில் நடந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொண்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், ’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டிலும், பாதுகாப்பு வீரர்கள் பலியானதை சுட்டிக் காட்டியும் அமீருக்கு ஈரான் அரசு மரண தண்டனை விதித்துள்ளது.

முன்னதாக, மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இரு மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 20 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பேர் கடந்த வாரம் பொது வெளியில் தூக்கிலிடப்பட்டனர். இதுவரை 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.