இலகு தவணை முறையின் விற்பனை செய்யபடும் கைப்பேசிகள்
விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து திருடப்பட்ட கைப்பேசிகளை இலகு தவணை முறையின் மூலம் பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹங்வெல்ல நகரில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளார்.
சந்தேகநபரால் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் அவிசாவளை, கொஸ்கம மற்றும் சாலாவ பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு இலகு தவணை முறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் விசாரணைகளின் போது திருடப்பட்ட 19 கைத்தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருட்டுச் சம்பவம் இடம்பெற்று சுமார் 10 மாதங்களின் பின்னர் நுகேகொட குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தை ஒட்டியுள்ள கடையொன்றில் கட்டட வேலைக்காக வந்த சந்தேகநபர், கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தின் பின்கதவு பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததை அவதானித்து இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
41 வயதுடைய களுஅக்கல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் திருடும் காட்சி விற்பனை நிலையத்தில்பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.