முட்டை விலையை அதிகரிக்க அனுமதி


முட்டை விலையை அதிகரிக்க உணவு பாதுகாப்பு குழு அனுமதி அளித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் பொருளாளர் விஜய அல்விஸ், மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

எனினும், குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக முட்டை உற்பத்தியாளர் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​முட்டை உற்பத்தியாளர் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட கோப்புகள் தமக்கும் நுகர்வோர் அதிகாரசபைக்கும் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

எவ்வாறாயினும், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய நாடளாவிய ரீதியில் மேலதிக சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதுவரை நடந்த சோதனையில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 145 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *