தொங்கு பாலம் விபத்து – 142 க்கும் மேற்பட்டோர் பலி
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடப்பதற்காக சுமார் 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் இருந்து வந்தது.
கடந்த 7 மாதங்களாக பாலத்தில் சீரமைப்பு பணி நடந்து வந்த நிலையில் தீபாவளியையொட்டியும் குஜராத் புத்தாண்டு தினமான கடந்த 26-ஆம் தேதி இந்த பாலம் திறக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் பிரபலமான பாலமாக இது கருதப்படுவதால் விடுமுறை தினமான நேற்று இந்த தொங்கு பாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இந்த தொங்கு பாலத்தில் இருந்தபடி இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தனர். சுமார் 300 பேர் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் திடீரென பாரம் தாங்காமல் அந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்தது.
இதனால் அந்த பாலத்தில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்தனர்.
ஆற்றுக்குள் விழுந்ததில் பெண்கள், குழந்தைகள் என நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரில் மூழ்கினர். பலரும் காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினர்.
மேலும் சிலர் தொங்கு பாலத்தில் தொங்கியபடி கரைக்கு சென்றனர். மேலும் சில நீச்சல் அடித்து கரைக்கு சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அப்பகுதிக்கு தேசிய மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் இதுவரை 142-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் தண்ணீரில் மூழ்கியவர்கள் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் 19 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாலத்தில் சீரமைப்பு பணி முடிந்து 4 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் பாலம் அறுந்து விழுந்ததால் சீரமைப்பு பணி முறையாக செய்யபடவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறமும், சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது என்றாலும் அதற்கான பிட்னஸ் சான்று அந்த பாலத்திற்கு வழங்கப்பட வில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பிட்னஸ் சான்று வழங்குவதற்குள் இந்த பாலம் திறக்கப்பட்டதால் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் 140-க்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கிய இந்த தொங்கு பாலம் விபத்துக்கு என்ன காரணம் என்பது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.