வவுனியாவில் புடவைக் கடைக்குள் இளைஞன் மீது கத்திக் குத்து
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் இளைஞன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலாக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (07) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்ற இளம் குடும்ப பெண் ஒருவருக்கு, வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் பள்ளிவாசலுக்கு அண்மையாக அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் கிண்டலடித்ததுடன், குறித்த பெண்ணுடன் பேச முனைந்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த சம்பவத்தை அவ் இளம் குடும்ப பெண் தனது கணவருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அங்கு வந்த கணவர் தனது மனைவியையும் அழைத்து சென்று கிண்டலடித்த இளைஞர் வேலை செய்யும் புடவைக் கடைக்குள் சென்று வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதை அடுத்து, குறித்த இளம் குடும்ப பெண்ணின் கணவன் குறித்த இளைஞன் மீது கத்தியால் குத்தியுள்ளார்.
அதன்பின் அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்ற போது அவ்விடத்தில் நின்றவர்கள் அவரை விரட்டிப் பிடித்து, வவுனியா பொலிஸாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவத்தில் வவுனியா, முருகனூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்திக் குத்தை மேற்கொண்டதாக வவுனியா, கல்வீரங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.