வவுனியாவில் பேருந்துகள் நிறுத்தாமையால் வீதிக்குவந்த மாணவர்கள்
பேருந்துகள் நிறுத்தாமல் செல்வதால் பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவித்து வவுனியா கொல்லர்புளியங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
காலை 7 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த பொதுமக்கள்,
பாடசாலைக்கு செல்வதற்காக காலை 6 மணிக்கே எமது பிள்ளைகள் வீட்டிலிருந்து சென்று பலமணிநேரம் காத்திருந்தும் பேருந்துகள் நிறுத்தப்படாமையினால் வீட்டிற்கே திரும்பி வருகின்ற நிலைமை காணப்படுகின்றது.
இதேவேளை பாடசாலை முடிவடைந்த பின்னரும் மாலை 4 மணிளவிலேயே பிள்ளைகள் வீட்டிற்கு வருகின்றனர். இதனால் எமது பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்படுவதுடன், பல்வேறு அசௌகரியங்களையும் சந்திக்கின்றனர். எனவே எமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பேருந்துகளை நிறுத்துவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கொல்லர்புளியங்குளம், மன்னகுளம், குஞ்சுக்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டதுடன், மாணவர்களை வீதியில் காத்திருக்க விடாதீர்கள், மாணவர்களின் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்,எமது உரிமையை காப்பாற்றுங்கள் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டகார்களுடன் கலந்துரையாடலை முன்னெடுத்த கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாணவர்கள் போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு பொலிசார் ஒத்துழைப்புகளை வழங்குவதோடு, பேருந்து சாரதி நடத்துனர்களிற்கு அறிவுறுத்தல்களையும் வழங்குவதாக வாக்குறுதி வழங்கியதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.