பேராபத்தில் சிக்கப்போகும் இலங்கை
மில்லியன் கணக்கான வறிய இலங்கையர்களால் போதிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் வாரங்களில் நிலைமை மோசமாகலாம் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
உயிர் காக்கும் உணவு மற்றும் போஷாக்கு உதவியுடன் குடும்பங்களைச் சென்றடைவதே எங்களின் முன்னுரிமை திட்டமாகும் என அமைப்பின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியப் பணிப்பாளர் ஜோன் ஐலீப் (John Aylieff) இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.
அண்மைய கணிப்பீடுகள் இலங்கையில் பட்டினி நிலை கடுமையாக அதிகரித்து வருவதாகக் காட்டுகின்றன. அங்கு நேர்காணல் செய்யப்பட்ட குடும்பங்களில் கிட்டத்தட்ட பாதி பேர் உணவை அணுகுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
வருமான இழப்புகள், சாதனை அளவு உணவு விலை பணவீக்கம், உணவு விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் மற்றும் கடுமையான பற்றாக்குறைகள், எரிபொருள் உட்பட்டவை இதற்கான காரணங்கள் என குறித்த அதிகாரி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஐந்தில் நான்கு குடும்பங்கள் பகுதி அளவில் உணவை கட்டுப்படுத்துகின்றன மற்றும் உணவைத் தவிர்க்கின்றன.
கணிசமான எண்ணிக்கையிலான நகர்ப்புற குடும்பங்கள் அவற்றில் அடங்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்தித்த, உலக உணவுத்திட்ட அதிகாரி, இலங்கையின் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான உடனடி முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.