7 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில்


7 வயது சிறுவன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு பாரிய காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (31) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் கந்தகெட்டிய- களுகஹகதுர என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவனே காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது தந்தைக்கு அலைபேசி மீள் நிரப்பும் அட்டையொன்றை கொள்வனவு செய்ய கடைக்குச் சென்ற சிறுவன் ஒருவனே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவத்தின் பின்னனி

இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுவனின் தந்தை, தான் பிள்ளையின் கையில் 100 ரூபாயைக் கொடுத்து மீள் நிரப்பும் அட்டையை கொள்வனவு செய்து வருமாறு கூறியதாகவும் தெரிவித்தார்.

கடைக்குச் செல்லும் வீதி மிகவும் சிறியது. இரண்டு புறங்களிலும் காடுகள் உள்ளதாகத் தெரிவித்த அவர், மகன் கடைக்குச் சென்று 5 நிமிடங்களில் சத்தமிட்டார்.நாங்கள் பாம்பு ஏதும் தீண்டிவிட்டதா என பயந்து ஓடினோம்.

அப்போது தமது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர் ஒருவர் அங்கிருந்து ஓடியதை அவதானித்தோம் என்றார். தனது மகன் கடைக்குச் செல்லும் முன்னர் சந்தேகநபர் வீட்டுக்கு வந்ததாகவும் இதன்போது சந்தேகநபரை தேநீர் அருந்துமாறு கூறினோம் வேண்டாம் என மறுத்து விட்டு வெற்றிலைப் போட்டதாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.

சந்தேக நபருக்கு வலைவீச்சு

இந்நிலையில் சந்தேக நபரான 51 வயதான நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை பாதிக்கபப்ட்ட சிறுவனுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் ஐவர் அடங்கிய குழுவொன்று சத்திரசிகிச்சையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், சிறுவன் தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *