இலங்கையில் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
நாளாந்தம் 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதற்கட்ட பணிகளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது ஒரு மணித்தியாலமும் நேரம் 20 நிமிடங்களும் மட்டுமே மின்வெட்டு அமுலில் உள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதல் கட்ட உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளன.
தொழில்நுட்ப செயலணியானது குறைபாட்டை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதற்கட்ட பணிகளை மீளமைக்க சுமார் இரண்டு வாரங்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் கட்டமும் பராமரிப்பு பணிகள் காரணமாக முடக்கப்பட்டு மூன்றாம் கட்டம் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது.
இதன்படி, நுரைச்சோலை அனல்மின் நிலையம் தேசிய மின்கட்டமைப்புக்கு 270 மெகாவாட் கொள்ளளவை மட்டுமே வழங்குகிறது.
எவ்வாறாயினும் யுகதனவி மற்றும் ஏனைய எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சார விநியோகத்தை முகாமைத்துவப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.