பட தலைப்பை மாற்ற கமலுக்கு கோரிக்கை


படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று கமலுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் மகள் தீபலட்சுமி கோரிக்கை வைத்து இருக்கிறார்.

விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கமல்ஹாசன் பங்கேற்று பேசினார். இந்த நிலையில் சில நேரங்களில் சில மனிதர்கள் தலைப்பை படத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என்று கமல்ஹாசனுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஜெயகாந்தன் மகள் தீபலட்சுமி முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எழுத்தாளர் ஜெயகாந்தனையும், அவரது எழுத்துகளையும் உண்மையாக மதிப்பவர்களும், நேசிப்பவர்களும், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் தலைப்பை வேறொரு கதைக்கோ, சினிமாவுக்கோ தலைப்பாக மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள். 2009-ல் அப்பாவின் சம்மதத்தை பெற்றுத்தான் ‘உன்னைப்போல் ஒருவன்’ தலைப்பை எடுத்துக்கொண்டீர்கள். பல சிறப்புகளை பெற்ற ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ குறித்த அனைத்து தடயங்களும் 2009 திரைப்படத்தின் டிஜிட்டல் சுவடுகளால் மறைக்கப்பட்டுவிட்டன என்பதை நீங்கள் அறிவீர்களா? அதே நிலை நடிகை லட்சுமிக்கு ஊர்வசி விருது பெற்றுத்தந்த, இன்றளவும் பலரால் பேசப்பட்டு விரும்பி ரசிக்கப்படுகிற‌ ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலுக்கும், திரைப்படத்துக்கும் ஏற்படக்கூடாது என்று நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்.

ஆகவே, த‌ங்கள் முன்னிலையில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற தலைப்பை தயவு செய்து மாற்றி வேறு தலைப்பு வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *