யாழ். மாவட்ட சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் பணிப் புறக்கணிப்பில்
தமக்கு எரிபொருள் வழங்குவதை சீராக்கும்படி கோரியுள்ள யாழ்.மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் சங்கம், இன்று தொடக்கம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பான அறிவிப்பை அந்தச் சங்கம் யாழ்.மாவட்டச் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. யாழ்.மாவட்டத்தில் பிரதேச செயலாளர்களின் கீழுள்ள அரச ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கலின்போது சில பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பணிகளில் ஈடுபட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எரிபொருள் விநியோக ஒழுங்குபடுத்தல் பணிகளில் பிரதேச செயலாளர் ஈடுபட்டுள்ளபோதும் அவர்களின் கீழ் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு வரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைத் தேவையினை கருத்திற் கொள்ளாது ஏனைய உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டமை தொடர்பில் சங்கத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
எனவே இதனைக் கண்டித்தும் எதிர்காலத்தில் எரிபொருள் வழங்கலின் போது உரிய பொறிமுறையினைப் பின்பற்றி எரிபொருள் வழங்கலை உறுதிப்படுத்துமாறுகோரியும் நாளை ஜூலை 4ஆம் திகதி முதல்
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் சீராகும் வரை தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளோம் என்றுள்ளது.