கொழும்பில் மர்ம கும்பல் – பொலிஸாரை கொலை செய்ய திட்டம்


போதைப்பொருள் சோதனைகள் மற்றும் பாதாள உலக அடக்கு முறைகளில் நேரடியாக ஈடுபட்டு ஓய்வுபெற்ற பல பொலிஸ் உத்தியோகத்தர்களை கொலை செய்ய பாதாள உலகக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் சோதனைகளை மேற்கொண்டு கடத்தல்காரர்களுக்கு தலைவலியாக இருந்த பல பொலிஸ் உத்தியோகத்தர்களை இவ்வாறு கொல்ல திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிகளவிலான போதைப்பொருட்களை கைப்பற்றி பாதாள உலகத்தை அடக்குவதற்கு அதிக பங்களிப்பு செய்துள்ள அண்மையில் ஓய்வுபெற்ற முன்னாள் பிரதான பொலிஸ் பரிசோதகர்களான மஞ்சுள டி சில்வா மற்றும் இ.எஸ்.தர்மப்பிரிய, அவர்களின் இலக்காக மாறியுள்ளதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மேல் மாகாண பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், சேவையில் உள்ள பல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக விசாரணை நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றவாளிகளினால் அச்சுறுத்தல்களைப் பெற்றதாக பாதிக்கப்பட்டோர் பாதுகாப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னர் அறிவித்திருந்தனர்.

நாட்டில் கடந்த மாதத்தில் இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 20 பேர் வரையில் கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மற்றும் இரு பாதாள உலக உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர்களினால் இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்களின் மூலம் மேலும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *