உலகின் மிகப் பெரிய நன்னீர் மீன்
உலகின் மிகப் பெரிய நன்னீர் மீன் கம்போடியாவில் மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் பதிவான மிகப் பெரிய நன்னீர் மீன் இதுவென விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நான்கு மீற்றர் அல்லது 13 அடி நீளமான இந்த மீனின் எடை சுமார் 300 கிலோ கிராம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் கடந்த 2005ம் ஆண்டில் தாய்லாந்தில் பாரிய மீன் ஒன்று பிடிக்கப்பட்டிருந்த்து. இந்த மீனின் எடை 293 கிலோ கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவே இதுவரை காலமும் மிக எடை கூடிய நன்னீர் மீன் என பதிவாகியிருந்தது. நன்னீரில் இவ்வாறான பாரிய மீன் வகைகளை காண்பது மிகவும் அரிதான விடயம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனா, மியன்மார், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளை ஊடறுத்துச் செல்லும் மீகொங் ஆற்றில் இந்த மீன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மீன் மேலும் வளரக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை மீன் பற்றிய விபரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீனை பிடித்த மீனவருக்கு 600 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.