யாழில் வைத்தியர்களின் கவனக்குறைவால் பெண் மரணம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
யாழில் பெண்ணின் வயிற்றிற்குள் மருந்து கட்டும் துண்டை வைத்து தைத்த சம்பவத்தில், சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்களின் கவனக்குறைவினாலேயே மரணம் நிகழ்ந்ததாக பருத்தித்துறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குறித்த சத்திரசிகிச்சையை முன்னெடுத்த வைத்தியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நெல்லியடி பொலிஸாருக்கு, பருத்தித்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் வைத்தியசாலையில், முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சையை தொடர்ந்து, கடந்த ஜனவரி 11ஆம் திகதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
கரவெட்டி, யார்க்கரு பகுதியை சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (60) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கர்ப்பப்பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது கர்ப்பப்பையை அகற்றுமாறு வைத்திய ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, கடந்த டிசம்பர் 10ஆம் திகதி நெல்லியடி, முடக்காடு பகுதியிலுள்ள ரூபின்ஸ் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு சென்றிருந்தார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மகப்பேற்றியல் வைத்திய நிபுணர் ஒருவர் தலைமையிலான குழுவினர் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டனர்.
அந்த சத்திரசிகிச்சையில் பங்கேற்ற பிற வைத்தியர்கள், தாதியர்கள் என பலரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரிபவர்களே. யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரும் பங்கேற்றிருந்தார். சிகிச்சையின் பின் வீடு திரும்பிய பெண், நோய்வாய்ப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பிரித்தானியாவிலுள்ள அவரது மகளும் நாடு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்திருந்ததால், ஜனவரி 11ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அன்று இரவே அவர் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, உடலுக்குள் மருந்து கட்ட பயன்படுத்தப்படும் துண்டு காணப்பட்டது.
50 செ.மீ நீளமும், 10 செ.மீ அகலமும் கொண்ட அந்த துண்டு, அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக உடலுக்குள் வைத்து தைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த துண்டு இருந்த பகுதியில் குடல் பழுதடைந்துள்ளது.
அந்த துண்டினால் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாகவே, பெண் உயிரிழந்தார் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலை 3 இலட்சம் ரூபாவி;ற்கும் அதிகமான பணத்தை கட்டணமாக வசூலித்துள்ளதும் தெரிய வந்தது.
இது தொடர்பான வழக்கு பருத்தித்துறை நீதிவான் நடந்து வந்தது. அனைத்து சமர்ப்பணங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு விபரங்களை சட்டமா அதிபரிடம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில்; நேற்று முன்தினம் (31-05-2022) இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, வைத்தியத்துறை சார்ந்த சிலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.