யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானம்


நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் தொடராக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனாப் பரவலின் தொடராக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அதன்பின்னர் கொரோனா நெருக்கடி நிலை தீர்ந்து பிசிஆர் பரிசோதனைகள் கூட தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும் இன்றுவரையில் குறித்த விமான நிலையத்தினை மீளத் திறப்பதற்கான ஏற்பாடுகள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை.

மூடப்படுகின்றதா யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்!

எனினும் பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போதும் தமிழ் இளைஞர்கள் 16 பேர் உட்பட 30 வரையானோர் பணியாற்றுவதால் அவர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகளை குறித்த விமான நிலையத்தினை நிர்வகிக்கும் நிறுவனம் செலவிடுவதாகத் தெரியவந்துள்ளது.

இதன் தொடராகவே குறித்த விமான நிலையத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுன்றது. கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கிய விமான சேவை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி வரையான ஐந்து மாத காலம் செயற்பட்டபோது வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்தவர்களே கூடுதலாக நன்மையடைந்திருந்தனர்.

மூடப்படுகின்றதா யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்!

இந்தியாவிற்குச் செல்லும் பயணிகள் கொழும்பு சென்று அங்கிருந்தே இந்தியாவிற்குச் செல்லும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக இந்தியா செல்வதற்கான வாய்ப்பு வடக்கு மக்களுக்கு காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது விமான நிலையத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை வடக்கு மக்கள் மத்தியில் கவலையைத் தோற்றுவித்துள்ளது.

அதேசமயம் விமான நிலையம் மூடப்படுவதாக அரசாங்கத் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *