மட்டக்களப்பில் சிறுவன் துஷ்பிரயோகம் – மின்சார சபை உத்தியோகத்தர் தற்கொலை
சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது
கடந்த வியாழக்கிழமை (26) வழமை போன்று மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் கடமையாற்றும் 57 வயதான நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கடமை நிமிர்த்தம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றிற்கு சென்று மின்மானியை பரீட்சித்துள்ளார்.
பின்னர் அந்த வீட்டில் தாயுடன் நின்ற 9 வயது மதிக்கத்தக்க சிறுவனை அருகில் உள்ள வீட்டின் மின் மானியை பார்வையிட துணைக்கு அழைத்து சென்றுள்ளதுடன் அங்கு சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இவ்வாறு குறித்த மின்வாசிப்பாளர் சென்ற பின்னர் சிறுவன் தனக்கு நடந்த அனைத்து விடயங்களையும் தனது பெற்றோரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் குறித்த மின்சார சபை ஊழியர் அன்றைய தினம் தனக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யவுள்ளதை அறிந்து மறுநாளான வெள்ளிக்கிழமை (27) அதிகாலை அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை அடுத்து மனைவி உள்ளிட்ட உறவினர் தூக்கில் தொங்கியவரை மீட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் தூக்கில் தொங்கியவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டன.
பின்னர் உயிரிழந்தவர் உடல் கூற்று விசாரணையின் படி கழுத்து பகுதி சுருக்கினால் இறுகியதால் மூச்சு திணறி இறப்பு சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நபர் திருமணமாகியுள்ளதுடன் இரு பிள்ளைகளளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.