நீர்கொழும்பு சிறையில் நபர் ஒருவர் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான புத்தளத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு சிறைச்சாலையின் கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.
புத்தளம் நாகவில்லு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன், இவருக்கு எதிரான வழக்கு புத்தளம் மேல் நீதிமன்றத்தில் நிலுவையிலும் உள்ளதாகவும் நீர்கொழும்பு சிறைச்சாலையின் கடமை நேர அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
மேற்படி சந்தேக நபருக்கு எதிரான வழக்கு புத்தளம் மேல்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையிலேயே சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட சந்தேக நபர், தொடர்ச்சியாக நீர்கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாகவும் நீர்கொழும்பு சிறைச்சாலையின் கடமை நேர அதிகாரியொருவர் கூறினார்.
இந்த நிலையில், சந்தேக நபருக்கு இன்று (25) அதிகாலை திடீரென சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக அவர் மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் அவர் சொன்னார்.
இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தரின் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு சிறைச்சாலையின் கடமை நேர அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.