பெண் உள்ளிட்ட 3 பேர் அதிரடியாக கைது
போதைப் பொருள் வியாபாரம் மூலம் பெற்ற பெருமளவு பணம் மற்றும் போதைப் பொருட்களுடன் பெண் உட்பட 3 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்திருப்பதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
கொடகம – அத்துருகிரிய பிரதேசத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 294 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய அங்கமுவ – பாதுக்க பிரதேசத்தில் 3 கிலோ 300 கிராம் ஹெரோயினுடன் பிரிதொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இண்டாவது சந்தேகநபரிடமிருந்து பெற்றுக் கொண்ட தகவலுக்கமைய போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய மற்றும் அதற்கு உதவிகளை வழங்கியமை தொடர்பில் அங்கமுவ – பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடமிருந்து ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு கோடியே 79 இலட்சத்து 36 500 ரூபா பணமும், போதைப்பொருள் வியாபாரத்திற்காக உபயோகிக்கப்பட்ட முச்சக்கரவண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இம்மூவரும் டுபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நபரொருவருடன் தொடர்புடையவர்கள் என்பதும் , டுபாயில் உள்ள நபர் கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவன் என்பதும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.