வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 230 பேர் அதிரடியாக கைது


கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது தனியார் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியமை, ஊரடங்கு உத்தரவை மீறியமை, நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 230 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களால் சுமார் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேபோல், நாடளாவிய ரீதியில் 200க்கும் அதிகமான வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (14) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்து.

சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ்மா அதிபர் இதன்போது தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குற்றவாளிகளுக்குப் பதிலாக அப்பாவி மக்களைக் கைது செய்ய பொலிஸார் தயாராகி வருவதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *