வன்முறை குறித்து எச்சரித்த பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை பதவி விலககோரி நடைபெற்ற போராட்டம் மீது அரசாங்க ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைகளை தடுக்க தவறியமைக்காக ஜனாதிபதி செயலக சுற்றாடல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களின் பாதுகாப்புக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சம்பிக்க சிறிவர்த்தன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக அவர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வருடத்தில் அவருக்கு வழங்கப்படும் 6 ஆவது இடமாற்றம் இதுவாகும்.கடந்த 8 ஆம் திகதி இரவு திடீர் சுகயீனமடைந்திருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன,

சுகமடைந்து நேற்று ( 13) கடமைக்கு திரும்பியிருந்த நிலையிலேயே உடனடியாக அமுலாகும் வகையில் கேகாலைக்கு இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வருடம் ஆரம்பிக்கும்போது பொலிஸ் தலைமையகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த சம்பிக்க சிறிவர்தன,

பின்னர் அரசியல் பழி வாங்கல் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அங்கு இரு மாதங்கள் சேவையார்றிய அவர், அங்கிருந்து சிறுவர் மற்றும் மகளிர் விவகார விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பாக இடமாற்றம் செய்யப்பட்ட அவர் பின்னர் விஷேட பாதுகாப்பு பிரிவின் பிரதானியாக இடமாற்றப்பட்டு அங்கிருந்து பதுளைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக அனுப்பி வைக்கப்பட்டார்.

இவ்வாறான நிலையிலேயே பதுளையிலிருந்து அவர் ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை அண்மித்த அமைதிப் போராட்ட பூமியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக்கப்பட்டு மீளவும் கொழும்புக்கு அழைக்கப்பட்டார்.

இவ்வாறான நிலையில், கடந்த 8 ஆம் திகதி, அமைதிப் போராட்ட பூமியின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன , பொலிஸ் பிரதானிகளிடம் கோரியிருந்ததாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன. அவ்வாறான நிலையிலேயே அன்றைய தினம் இரவு அவர் திடீரென சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே அவர் தற்போது கேகாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த அமைதி போராட்டம் மீதான தாக்குதல்கள் தொடர்பில் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்னும் அதே பதவியில் நீடிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *