இலங்கையில் வன்முறைகள் – 9 பேர் பலி, சேதமடைந்த சொத்துக்களின் விபரம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அரசாங்கத்தை பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியதை தொடர்ந்து நாடெங்கும் பரவிய வன்முறைகள் காரணமாக 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மரணங்கள்
வன்முறைகள் காரணமாக ஏற்பட்ட மரணங்கள் மேல் மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் பதிவாகியுள்ளன. மேல் மாகாணத்தில் 6 மரணங்களும் தென் மாகணத்தில் மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளன.
தென் மாகாணத்தின் வீரகெட்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் நேற்று (9) இரவு இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர். வீரகெட்டிய பொலிஸாரின் தகவல்கள் பிரகாரம், வீரகெட்டிய பிரதேச சபை தலைவரின் வீட்டின் முன்பாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
அத்துடன் இமதுவ பிரதேச சபை தலைவர் ஏ.வி. சரத் குமாரவின் வீட்டின் மீதான தாக்குதலின் போது அவரும் உயிரிழந்துள்ளார். மேல் மாகாணத்தில் உயிரிழந்த ஆறு பேரில் இருவர் பொலிசாராவார்.
அலரி மாளிகை பின் பக்க நுழைவாயில் அருகே, நேற்று 9 ஆம் திகதி இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல் முன்னெடுக்க முயன்ற 24 வயதான பொலிஸ் கலகத் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கி வெடித்து அவர் உயிரிழந்துள்ளார்.
இதனைவிட மற்றொரு தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அத்துடன் நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டம் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கூறி முன்னெடுக்கப்பட்ட ஆதரவு வன்முறைகளைத் தொடர்ந்து, வீடு திரும்பிக்கொண்டிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே சிக்கி உயிரிழந்துள்ளார்.
அவரது சாரதியும் உயிரிழந்த நிலையில், அச்சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாவர்கள் முன்னெடுத்ததாக கூறும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே நீர் கொழும்பு பகுதியில் ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குத்ல் நடாத்தப்பட்ட சம்பவம் மற்றும் அது சார் வன் முறைகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயம்
இவ்வாறான நிலையிலேயே காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் 232 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெறுவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
அந்த 5 பேரில் இரு அருட் தந்தையினரும் இரு பொலிஸாரும் ஒரு அமைதி ஆர்ப்பாட்டக் காரரும் உள்ளடங்குகின்றனர்.
சொத்து சேதங்கள்
வன்முறைகள் காரணமாக அதிக சொத்து சேதங்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன. மேல் மாகாணத்தில் 29 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதுடன் 15 வாகனங்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
8 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 23 வீடுகள் இம்மாகாணத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தென் மாகாணத்தில் 7 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு 9 வீடுகள் அடித்துடைக்கப்பட்டுள்ளன. அங்கு 5 வாகனங்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளன.
மத்திய மாகாணத்தில் 4 வாகனங்களும் 6 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் அடித்துடைக்கப்பட்டுள்ளன. சப்ரகமுவ மாகாணத்தில் 9 வாகனங்களும் 8 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அங்கு இரு வாகனங்கள் 7 வீடுகள் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
வடமத்திய மாகாணத்தில் 3 வாகனங்களும் 4 வீடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வட மேல் மாகாணத்தில் 5 வாகனங்களும் 9 வீடுகளும் தீவைத்து முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், 13 வாகனங்களும் 15 வீடுகளும் வீடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
கிழக்கில் 3 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஊவா மாகாணத்தில் 2 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் வடக்கில் எந்த வன்முறை சம்பவ சேதங்களும் பதிவாகவில்லை என பொலிஸார் கூறினர்.