காலிமுகத்திடலில் இராணுவத்தினர் குவிப்பு – சவேந்திர சில்வாவும் விஜயம்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து குறித்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இராணுவத்தினர் குறித்த பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதிக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

காலிமுகத்திடல் பகுதிக்குள் நுழையும் பகுதிகள் பொலிஸாரால் மூடப்பட்டு வருகின்றன.

காலிமுகத்திடல் பகுதிக்குள் நுழைவதற்காக மேலும் சிலர் முயற்சித்து வரும் நிலையில் பொலிஸார் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் அவ்வாறு நுழைய முற்படுபவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காலிமுகத்திடல் பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற சூழல் தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், காலிமுகத்திடல் பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக 9 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அப்பகுதியில் பெருமளவான அதிரடிப்படை, பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவு குவிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வரும் “கோட்டா கோ கம” பகுதிக்குள் நுழைந்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களும் உடைத்து எறியப்படுகின்றன.

காலிமுகத்திடல் பகுதியில் பதற்றத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நடுவில் பெருந்திரளான பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பொலிஸார் (தடுப்பு சுவர் போல்) குவிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொள்வதற்கான பொலிஸ் வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

காலிமுகத்திடல் நோக்கி விரையும் அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதலை மேற்கொள்ளும் வகையில் பொல்லுகள் மற்றும் தடிகளுடன் காலிமுகத்திடல் நோக்கி விரைவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.