வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்
வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று (30.05) மாலை வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வவுனியாவை சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் சென்றுள்ளனர்.
இதன்போது அதிகமான பொதுமக்கள் வரிசையில் நின்றமையால் அந்த நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு ஊடகவியலாளர்களால் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்த ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
கருத்து முரண்பாடு முற்றிய நிலையில் தாம் ஊடகவியலாளர்கள் என அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அதனை பொருட்படுத்தாத ஊழியர்கள் கடந்த முறையும் எமது நிரப்பு நிலையம் தொடர்பான செய்தியினை நீதானே பிரசுரித்தாய் என கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். குறித்த சம்பவத்தில் ஊழியர்களுடன் இணைந்து நிரப்பு நிலையத்தின் முகாமையாளரும் தாக்கியிருந்தார்.
அத்துடன் அவர்களது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டு அடித்து துரத்தப்பட்டனர். சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிசார் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை குறித்த நிரப்பு நிலையத்தின் கண்காணிப்பு கமரா பதிவுகளை வழங்குமாறு ஏனைய ஊடகவியலாளர்களால் அதன் நடத்துனருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் மின்சாரம் இல்லை என்பதால் இரகசிய கமரா இயங்கவில்லை என குறித்த நிலைய முகாமையாளரால் தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள பிரதான நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்று கொள்வதில் பொதுமக்களுக்கும், நிரப்பு நிலையத்தின் ஊழியர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.